கடலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் திருடிய 2 பேர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
கடலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகி்னறனர்.
நெல்லிக்குப்பம்,
திருட்டு
கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தப்பன். இவர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வெளியூருக்கு சென்ற சாந்தப்பன், 11-ந் தேதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் லேப்டாப் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
சிறையில் இருந்தவர்களுக்கு தொடர்பு
இதுகுறித்து அவர் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் கடலூர் புதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 36), ஆலப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் ( 23) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர்களை, போலீஸ் காவலில் எடுத்து, ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் விசாரணை நடத்தினார்.
2 பேருக்கு வலைவீச்சு
அப்போது அவர்கள் இருவரும், சாந்தப்பன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து வெள்ளி பொருட்கள், இருசக்கர வாகனம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர்கள். இந்த திருட்டு வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story