ரூ.28 கோடியில் குடகனாறு அணை பராமரிப்பு
வேடசந்தூர் அருகே உள்ள குடகனாறு அணையில் ரூ.28 கோடியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
வேடசந்தூர்:
குடகனாறு அணை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரி குடகனாறு அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 27 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 23.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2 ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 340 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
பாசனத்திற்கு 2 வாய்க்கால்கள் மூலம் வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையால் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
ரூ.28 கோடியில் பராமரிப்பு பணி
இந்நிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று காலை அழகாபுரி குடகனாறு அணைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீர்வள ஆதாரத்துறை சார்பில் அணையில் ரூ.28 கோடி செலவில் 15 ஷட்டர்கள் பழுது பார்த்தல், வாய்க்கால் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் செய்வதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் பெற்று அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியதைபோல் நீர் நிலைகள் மேம்படுத்த, தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் அழகாபுரி குடகனாறு அணையிலும் நீர்மட்டம் 27 அடி வரை தேக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது வேடசந்தூர் எம்.எல்.ஏ. எஸ்.காந்திராஜன், மாவட்ட கலெக்டர்கள் விசாகன் (திண்டுக்கல்), பிரபுசங்கர் (கரூர்), வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், நகர செயலாளர் கார்த்திகேயன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பிரியம் நடராஜன், குடகனாறு அணை செயற்பொறியாளர் கோபி, உதவிப்பொறியாளர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story