மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்
மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்
திருப்பூர்,
பொங்கலூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் பொதுபயன்பாட்டுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
மரங்கள் அகற்றம்
திருப்பூரை அடுத்த பொங்கலூர் ஒன்றியம், வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீதுவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணாபுரம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள கோவில் அருகே உள்ள நிலத்தை வெளியூர் நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக மரங்களை அகற்றி சுத்தம் செய்து வருகிறார்கள். இதில் கோவில் கூட சேதமடைந்துள்ளது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். எங்கள் பகுதியில் ரேஷன் கடை இல்லை. 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்வதில் சிரமம் உள்ளது. எனவே கோவிலுக்கு அருகே உள்ள காலி இடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
பொது பயன்பாடு
பொங்கலுர் பகுதி விவசாய பகுதியாக இருப்பதால் மக்காச்சோளம், தேங்காய் ஆகியவற்றை உலர்த்தும் வகையில் உலர் களம் அமைத்தால் மிகவும் பயன் உள்ளதாக அமையும். மேலும் எங்களுக்கு மயான பூமி இதுவரை இல்லை. அதற்கான இடத்தையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊருக்கு அருகில் உள்ள நிலத்தை மக்களின் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கி கொடுக்க வேண்டும். கோவில் சிலைகள் சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
பொதுமக்களுடன் பொங்கலூர் ஒன்றியக்குழு தலைவர் வக்கீல் குமார், வடக்குஅவினாசிபாளையம் ஊராட்சி தலைவர் நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு, அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் யு.எஸ்.பழனிசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் மகாலிங்கம் உள்ளிட்டவர்கள் உடன் வந்தனர்.
Related Tags :
Next Story