முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு; கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு குறித்து ஆலோசித்தனர்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அனுப்பிய கடிதம் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். கேரளாவுக்கு நீர் திறப்பு குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
தேனி:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அனுப்பிய கடிதம் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். கேரளாவுக்கு நீர் திறப்பு குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
முல்லைப்பெரியாறு அணை
தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 30-ந்தேதி அதிகாலையில் 142 அடியை எட்டியது. இந்த அணையின் நீர்மட்டம் 152 அடி என்ற போதிலும் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் நீர் தேக்கக்கூடாது என்பதால் உபரிநீர் கேரளாவுக்கு திறக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நேற்று முன்தினம் அதிகாலையில் அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் கேரள பகுதிக்கு திறக்கப்பட்டது. சில மணி நேரங்களில் வெளியேற்றும் நீர் அளவு வினாடிக்கு 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது.
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு பல கட்டமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கடந்த 30-ந்தேதி அதிகாலையில் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. அப்படி இருந்தும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆற்றுப் படுகையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி குடியிருப்பவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க இடுக்கி மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வல்லக்கடவு பகுதியில் சில வீடுகளில் நேற்று முன்தினம் தண்ணீர் புகுந்தது.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து அணையில் இருந்து இரவு நேரத்தில் தண்ணீர் திறக்கக்கூடாது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தகவல் கொடுக்காமல் நீர் திறந்துவிட்டதாக குற்றச்சாட்டையும் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழ்நிலையில் தமிழக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் கு.ராமமூர்த்தி தலைமையில், மதுரை மண்டல தலைமை பொறியாளர் கிருஷ்ணன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, பெரியாறு-வைகை வடிநில கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர்.
முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, மண் அணை, கேரளாவுக்கு உபரிநீர் திறக்கும் மதகுகள் ஆகியவற்றை பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர்.
ஆலோசனை
பின்னர் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்துவது, நீர்வரத்துக்கு ஏற்ப கேரள பகுதிகளுக்கு உபரிநீர் திறப்பது போன்றவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதன்மை தலைமை பொறியாளர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முறையாக கடைபிடிப்பது தொடர்பாகவும், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையளவு, நீர்வரத்து ஆகிய விவரங்களை ஒவ்வொரு மணி நேரமும் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், குமார், பிரவீன்குமார், பரதன், முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் தேக்கடி தலைமதகு, தமிழகத்துக்கு வரும் தண்ணீரை இரைச்சல் பாலம் வழியாகவும், ராட்சத குழாய்கள் வழியாகவும் பிரித்து அனுப்பும் இடமான ‘போர்பே அணை' ஆகிய இடங்களையும் இந்த அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 954 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 141.85 அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும், கேரளாவுக்கு வினாடிக்கு 1,300 கன அடியும் நீர் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story