வேலூர் கோட்டை அகழிநீரை வெளியேற்ற போராடும் மாநகராட்சி ஊழியர்கள்
வேலூர் கோட்டை அகழிநீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராடி வருகின்றனர். 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டும் தண்ணீர் வெளியேறவில்லை.
வேலூர்
வேலூர் கோட்டை அகழிநீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராடி வருகின்றனர். 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டும் தண்ணீர் வெளியேறவில்லை.
கோவிலுக்குள் தண்ணீர்
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி தண்ணீர் தேங்க தொடங்கியது. இதையடுத்து தொடர்மழை காரணமாக அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் கோவிலிலும் தண்ணீர் உயர்ந்தது. தற்போது கோவிலில் இடுப்பளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. கருவறைக்குள்ளேயும் தண்ணீர் தேங்கியது.
இந்த தண்ணீரை வெளியேற்ற கடந்த சில நாட்களாக பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. இதனால் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
கால்வாய் தோண்டும் பணி
வேலூர் கோட்டை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது அகழி உபரிநீர் பாலாற்றுடன் கலக்கும் வகையில் மதகுகளுடன் கூடிய கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் வேலூர்-பெங்களூரு சாலையின் அடியில் கடந்து புதிய மீன்மார்க்கெட் அருகே உள்ள கால்வாய் வழியாக நிக்கல்சன் கால்வாயுடன் இணைந்து பாலாற்றுக்கு செல்கிறது.
அகழியில் இருந்து வரும் கால்வாயுடன் இணையும் கழிவுநீர் கால்வாய் மண்ணால் மூடப்பட்டு தூர்ந்து போய் இருந்தது. இதனால் அகழிநீர் வெளியேறவில்லை. எனவே கழிவுநீர் கால்வாயில் பள்ளம் தோண்டப்பட்டு, அகழியில் இருந்து வரும் கால்வாய் கண்டறியும் பணி நடந்தது. அகழியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பல்வேறு வழிமுறைகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடைபிடித்தனர். அவை அனைத்தும் தோல்வியாகவே அமைந்தது.
மண் அடைப்பு
நேற்று முன்தினம் சாலையில் பள்ளம் தோண்டி கால்வாயில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவை முடியவில்லை. இந்தநிலையில் நேற்றும் கழிவுநீர் கால்வாய் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து சுமார் 5 அடி ஆழம் கூடுதலாக தோண்டப்பட்டது. அதில் அகழியில் இருந்து வரும் கால்வாய் கண்டறியப்பட்டது. ஆனால் அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பலமணி நேரம் போராடிய அவர்களின் முயற்சி வீணானது. அந்த அடைப்பை அவர்களால் எடுக்கமுடியவில்லை. எனவே அந்தபணியை அவர்கள் தற்காலிகமாக கைவிட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதில் அகழி கால்வாய் கண்டறியப்பட்டுள்ளது. அதில் அடைப்பு உள்ளது. அந்த அடைப்பு நாளை (இன்று) எடுக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story