தேவதானப்பட்டி அருகே நிற்காமல் சென்ற அரசு பஸ் சிறைபிடிப்பு


தேவதானப்பட்டி அருகே நிற்காமல் சென்ற அரசு பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 10:12 PM IST (Updated: 3 Dec 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே நிற்காமல் சென்ற அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

தேவதானப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் இருந்து வைகை அணை, வரதராஜ்நகர், குள்ளப்புரம் வழியாக அ.வாடிப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று வழக்கம்போல் ஆண்டிப்பட்டியில் இருந்து அ.வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. வரதராஜ்நகர் பஸ் நிறுத்தத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த டவுன் பஸ் வரதராஜ்நகர் பகுதிக்கு வந்தது. ஏற்கனவே பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பெண்கள், பஸ்சை மறித்தனர். ஆனால் அந்த பஸ் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், தங்களது ஊரில் உள்ள பொதுமக்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வரதராஜ்நகரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஆட்டோ பிடித்து, அந்த பஸ்சை பின்தொடர்ந்து சென்றனர். ஒருகட்டத்தில் பஸ்சை முந்தியபடி சென்ற அவர்கள், பஸ்சை வழிமறித்து நிறுத்தனர். 
பின்னர் அந்த பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிவரும் காலங்களில் வரதராஜ்நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அப்போது டிரைவர், கண்டக்டர் பஸ்சை நிறுத்தி செல்வதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story