கூடலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல்
கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் 222 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்:
கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் 222 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையிலான போலீசார் அங்கு வந்து, கட்டுமான தொழிலாளர் சங்கத்தினரை தடுக்க முயற்சித்தனர். இருப்பினும் பஸ் நிலையம் முன்பு திரண்டு வந்த அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு கூடலூர் கட்டுமான நலச்சங்க தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பெயிண்டர் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன், புதிய கட்டுமான நலச்சங்க தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் பிச்சைமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
222 பேர் கைது
இந்த போராட்டத்தின்போது கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரியத்துக்கு ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த மறியலால் கூடலூரில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 222 பேரை போலீசார் கைது செய்து, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story