கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய நர்சு
விபத்தில் காயமடைந்து மயங்கி கிடந்த கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய நர்சுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மன்னார்குடி;
விபத்தில் காயமடைந்து மயங்கி கிடந்த கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய நர்சுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
விபத்தில் காயம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் தோட்டத்தை சேர்ந்தவர் வனஜா (வயது39). இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருேக உள்ள சிராங்குடி என்ற ஊருக்கு தனது கணவர் ஆனந்தன் மற்றும் இரு குழந்தைகளுடன் சென்று விட்டு காரில் மன்னார்குடி திரும்பி வந்து கொண்டிருந்தார். மதுக்கூர் வழியில் பாலம் சேதமடைந்து இருந்ததால் வடசேரி சாலை வழியாக அவர் மன்னார்குடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடியை நெருங்கும் இடத்தில் 6-நம்பர் வாய்க்கால் குறுக்கிடும் பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது இவரது காருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஆடு வந்ததால் ஆட்டின் மீது மோட்டார்சைக்கிள் மோதி அந்த வாலிபர் கீழே விழுந்து காயமடைந்து மயக்கமடைந்தார்.
முதலுதவி சிகிச்சை
இதைக்கண்ட வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று வாலிபரை பரிசோதனை செய்தார். அப்போது அவரது நாடித் துடிப்பு குறைந்து வாலிபர் ஆபத்தானநிலையில் இருந்தார். இதைத்தாடர்ந்து. உடனடியாக செயலில் இறங்கிய நர்ஸ் வனஜா இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் முதலுதவி சிகிச்சையை வாலிபருக்கு அளித்தார். மயங்கி கிடந்த வாலிபரின் மார்பின் மீது தனது கைகளால் அழுத்தி அவர் சிகிச்சை அளித்தார்.
கல்லூரி மாணவர்
இதனால் மீண்டும் வாலிபரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பு சீரானது. பின்னர் அவருக்கு சுயநினைவு திரும்பியது. இதற்கிடையே வனஜாவின் கணவர் ஆனந்தன்108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது. இதன்பின் உடனடியாக ஆம்புலன்சில் அந்த வாலிபரை ஏற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த வாலிபர் குறித்து நடத்திய விசாரணையில் அவர் மன்னார்குடி அருகே உள்ள கருவாகுறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வசந்த் (வயது 19) என்றும் அவர் மல்லிப்பட்டினம் அருகே உள்ள மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
பாராட்டு
பின்னர் வசந்த் மேல் சிக்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்ட பிறகே நர்சு வனஜா அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்றார். விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றிய நர்ஸ் வனஜாவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story