மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீடு. அமைச்சர் ஆர்.காந்தி தகவல்


மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீடு. அமைச்சர் ஆர்.காந்தி தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2021 10:54 PM IST (Updated: 3 Dec 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளற்ற மாற்றுத்தினறாளி குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீடுகட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

வீடுகளற்ற மாற்றுத்தினறாளி குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீடுகட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் தின விழா

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மொபட், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்காந்தி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் 35 பேருக்கு ரூ.27 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மொபட், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 33 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ், தன்னார்வலர்கள் 25 பேருக்கு நினைவு பரிசு வழங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

வீடு கட்டித்தர நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகள் நல்ல நிலையில் உள்ள மற்றவர்களை காட்டிலும் தனிப்பட்ட திறமை கொண்டவர்கள். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் துன்பப்பட்டு குழந்தைகளை கவனித்து வருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். மாற்றுத் திறனாளிகளின் கஷ்டங்களை போக்கிடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் அரசு உதவிகளை செய்து வருகிறார். மனம் தளராமல் இருங்கள். வீடுகள் அற்ற மாற்று திறனாளி குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர விரைவில் நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கடரமணன்,  கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story