2 ரவுடிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை


2 ரவுடிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 3 Dec 2021 11:15 PM IST (Updated: 3 Dec 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 ரவுடிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவிட்டது.

மயிலாடுதுறை:
போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 ரவுடிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவிட்டது.
போலீஸ்காரரை அரிவாளால் வெட்டினர்
மயிலாடுதுறை உதவி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படையில்  போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2.4.2014 அன்று கூறைநாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். 
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 ேபரும் போலீஸ்காரர் மூர்த்தியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். 
2 பேர் கைது
இந்த வழக்கில் சீர்காழி தாலுகா வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மணிவேல் மகன் வினோத் (வயது 35), மயிலாடுதுறை தாலுகா நெடுமருதூர் கீழத்தெருவை சேர்ந்த காந்தி மகன் கோகுலகிருஷ்ணன்(32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 
7 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதன்மை சார்பு நீதிபதி கவுதம் தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் வினோத்திற்கு கொலை முயற்சி வழக்கிற்காக 7 ஆண்டுகளும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக 3 ஆண்டுகளும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 
இதேபோல கோகுலகிருஷ்ணனுக்கு கொலை முயற்சி வழக்கிற்காக 7 ஆண்டுகளும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக 3 ஆண்டுகளும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 
சிறையில் அடைப்பு
கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டதையடுத்து வினோத், கோகுலகிருஷ்ணன் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தண்டனை பெற்ற வினோத் மீது கொலை, கொள்ளை, கொலைமுயற்சி வழக்குகள் என 12 வழக்குகள் உள்ளதாகவும், கோகுலகிருஷ்ணன் மீது 6 வழக்குகள் உள்ளதாகவும், இவர்கள் 2 பேரின் பெயரும் ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story