டவுன் பஸ்சை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் சாலை மறியல்


டவுன் பஸ்சை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Dec 2021 1:23 AM IST (Updated: 4 Dec 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

டவுன் பஸ்சை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேப்பந்தட்டை:

மாணவ, மாணவிகள் அவதி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு பெரம்பலூரில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூரில் இருந்து வரும் இந்த பஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.30 மணி அளவில் புறப்பட்டு மீண்டும் பெரம்பலூர் நோக்கி செல்வது வழக்கம். இதனால் இந்த பஸ் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு வசதியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அந்த டவுன் பஸ்சின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு காலை 6.30 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர் சென்றது. இதனால் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
சாலை மறியல்
இதனைத் தொடர்ந்து நேற்று காலை மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த அந்த டவுன் பஸ்சை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பழைய நேரப்படி காலை 7.30 மணியளவில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் அந்த பஸ் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story