வறண்டு கிடக்கும் கறம்பக்குடி பெரியகுளம்


வறண்டு கிடக்கும் கறம்பக்குடி பெரியகுளம்
x
தினத்தந்தி 4 Dec 2021 1:23 AM IST (Updated: 4 Dec 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

அக்னி ஆற்றில் வெள்ளம் கரைபுரளும் நிலையில் அதன் அருகில் உள்ள கறம்பக்குடி பெரியகுளம் வறண்டு கிடக்கிறது.

கறம்பக்குடி
கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அக்னி ஆற்றின் அருகே கறம்பக்குடி பெரியகுளம் உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்திற்கு வரும் மழைநீர் வரத்து வாரிகள் அடைக்கப்பட்டதாலும், நிலபரப்புகள் மேடானதாலும் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை.
 இதனால் இந்த குளத்து தண்ணீரை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் நிலத்தை தரிசாக வைத்து உள்ளனர். ஒரு சிலர் மட்டும் ஆழ்குழாய் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த குளம் பொதுப்பணி துறையின் பராமரிப்பில் உள்ளது. குளத்தை தூர் வாருவது, மதகுகளை சீரமைப்பது போன்ற பணிகளுக்காக அவ்வப்போது நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், குளத்திற்கு தண்ணீர் செல்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தண்ணீர் நிரம்பவில்லை
 இந்தநிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் அக்னி ஆறு முழுமையாக நிரம்பி வெள்ளம் கரை புரளுகிறது. இதேபோல, இந்த குளத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நரியாறு, பெரியாறு ஆகிய 2 ஆறுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆனால், கறம்பக்குடி பெரியகுளத்தில் தண்ணீர் நிரம்பாமல் வறண்டு கருவேல மரங்கள் மண்டி புதர்போல காட்சி அளிக்கிறது. இதைக்கண்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பெரியகுளம் ஆயக்கட்டு சங்க விவசாயிகள் கூறுகையில், இந்த குளத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாகுபடி வயல்கள் எல்லாம் வெள்ளக்காடாக உள்ளது. ஆனால் கறம்பக்குடி பகுதிக்கே நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள பெரியகுளம் வறண்டு கிடப்பது வேதனைக்குரியது. ஆகவே, இந்த குளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, கரைகளை பலப்படுத்தி, தண்ணீர் வர வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், இந்த குளத்திற்கு அருகே உள்ள அக்னி ஆற்று மானியவயல் அணைக்கட்டில் இருந்து ஷட்டர் அமைத்து தனி வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story