தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குப்பைகள் அகற்றப்படுமா?
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் நுழைவுவாயில் அருகே சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை தூக்கிப்போட்டு விட்டுச் செல்கிறார்கள். இதனால் குப்பைகள் தேங்கி மலைபோல் குவிந்து இருக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் மழை தண்ணீர் குப்பைகளில் தேங்கி விடுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொது இடங்களில் மது அருந்துவதை போலீசார் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், பாலாஜி நகர்.
கால்நடை ஆஸ்பத்திரி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கணபதி அக்ரகாரம் ஊராட்சியில் கால்நடை ஆஸ்பத்திரி வசதி இல்லை. இந்த ஊராட்சியை சுற்றி 15-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வசித்து வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கு கால்நடை ஆஸ்பத்திரி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தமிழன் பிரபு, கணபதி அக்ரகாரம்.
விரைந்து முடிக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி வழியாக வல்லம் செல்ல கூடிய சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தரைப்பாலம் வேலை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பத்து கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பாலம் வேலையை உடனடியாக விரைந்து முடிக்க பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், வல்லம்.
குரங்குகள் தொல்லை
தஞ்சை மாவட்டம் நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் கடந்த பல மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடந்து செல்ல முடியவில்லை. வெளியே வந்தால் அவர்களை குரங்குகள் விரட்டி, விரட்டி கடிக்க வருகின்றன. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்திலும், வனத்துறையிலும், மாவட்ட அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள்,நீலகிரி ஊராட்சி.
Related Tags :
Next Story