பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் காங்கிரஸ் பிரமுகருக்கு முன்ஜாமீன்
பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில் காங்கிரஸ் பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
பெங்களூரு: பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில் காங்கிரஸ் பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
எம்.எல்.ஏ.வை கொல்ல சதி
பெங்களூரு எலகங்கா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எஸ்.ஆர்.விஸ்வநாத். இவர், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் பிரமுகரும், எலகங்கா சட்டசபை தொகுதியில் எஸ்.ஆர்.விஸ்வநாத்தை எதிர்த்து போட்டியிட்டு 2 முறை தோல்வி அடைந்தவருமான கோபால கிருஷ்ணா, ரவுடியான தேவராஜ் என்ற குல்லா தேவராஜுடன் சேர்ந்து எஸ்.ஆர்.விஸ்வநாத்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை எஸ்.ஆர்.விஸ்வநாத் வெளியிட்டு இருந்தார். மேலும் இதுகுறித்து பெங்களூரு புறநகர் ராஜனகுன்டே போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து, கோபால கிருஷ்ணா, தேவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு
இந்த வழக்கில் தேவராஜை ராஜனகுன்டே போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் அவரை, கோபால கிருஷ்ணாவுடன் சேர்ந்து எம்.எல்.ஏ.வை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய பகுதிகளுக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி இருந்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி பெங்களூரு கோர்ட்டில் தேவராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, தேவராஜுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையில், எம்.எல்.ஏ.வை கொலை செய்ய முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி கோபால கிருஷ்ணாவுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர்.
முன்ஜாமீன்
இந்த நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனக்கு முன்ஜாமீன் கோரி பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் கோபால கிருஷ்ணா மனுத்தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதாவது பெங்களூருவில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லக்கூடாது, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், சாட்சிகளை அழிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை கோபால கிருஷ்ணாவுக்கு கோர்ட்டு விதித்துள்ளது. இருப்பினும் அவரிடம் கூடிய விரைவில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
சி.பி.ஐ. விசாரணை
இதற்கிடையில், பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் பிரமுகர் கோபால கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எஸ்.ஆர்.விஸ்வநாத்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பான வீடியோ, ஆடியோக்கள் அனைத்தும் போலியானது. எனக்கு எதிராக எஸ்.ஆர்.விஸ்வநாத், தேவராஜ், சதீஸ் ஆகிய 3 பேரும் சதித்திட்டம் தீட்டி, இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பேன்.
எஸ்.ஆர்.விஸ்வநாத்தை கொலை செய்ய முயன்ற வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினால் தான், இந்த வழக்கில் மறைந்திருக்கும் உண்மை வெளியே வரும். கடபகெரே சீனிவாஸ் கொலையில் எஸ்.ஆர்.விஸ்வநாத்திற்கு தொடர்பு உள்ளது, என்றார்.
Related Tags :
Next Story