கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு


கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு
x
தினத்தந்தி 4 Dec 2021 2:49 AM IST (Updated: 4 Dec 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள நிலையில் மாநிலத்தில் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி பெற்றோர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர முடியும் என்றும், பள்ளிகளில் விழாக்கள் நடத்த தடை விதித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள நிலையில் மாநிலத்தில் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி பெற்றோர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர முடியும் என்றும், பள்ளிகளில் விழாக்கள் நடத்த தடை விதித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பெங்களூருவில் 2 பேருக்கு பாதிப்பு

புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

அவர்களில் ஒருவர் தென்ஆப்பிாிக்காவை சேர்ந்த முதியவர். அவர் ஒரே வாரத்தில் சொந்த நாட்டிற்கு சென்றுவிட்டார். மற்றொருவர் பெங்களூருவை சேர்ந்த டாக்டர். 46 வயதான அவருக்கு எப்படி இந்த ஒமைக்ரான் வைரஸ் வந்தது என்று தெரியவில்லை. அவரை பெங்களூருவில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உயர்மட்ட குழு ஆலோசனை

அவருடன் தொடர்பில் இருந்து 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மரபணு வரிசையை கண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து பஸ், ரெயில் நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெங்களூரு, மங்களூரு விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கர்நாடகத்தில்  ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

கட்டுப்பாடுகள்

இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா, முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

 இந்த கூட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் மதியம் 1 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் தியேட்டர்கள், வணிக வளாகங்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதி அளிப்பது என்றும், அதுபோல் 2 டோஸ் தடுப்பூசி போட்ட பெற்றோரின் பிள்ளைகளை மட்டும் பள்ளிக்கு வர அனுமதிப்பது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது. 

ஆர்.அசோக் பேட்டி

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது குறித்து உயர்மட்ட குழுவினர் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மந்திரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினர் கலந்து கொண்டனர். 

பெங்களூருவில் 2 பேருக்கு இந்த ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இதுவரை 400 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அறிக்கை கிடைக்கவில்லை

இந்த வைரஸ் குறித்து ஆய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறு தேசிய மருத்துவ கவுன்சிலிடம் கேட்டுள்ளோம். இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு லேசான பாதிப்பு தான் ஏற்படுகிறது. நோய் தீவிரத்தன்மையை கொண்டதாக இல்லை. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை.

இருப்பினும் கர்நாடகத்தில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். கர்நாடகத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாத பயணிகள் மட்டுமே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்

தியேட்டர்கள், வணிக வளாகங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காட்டினால், மட்டுமே உள்ளே செல்ல அனுமதிப்படுவார்கள். அதே போல் பெற்றோர் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அவர்களின் குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி-கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நடத்த தடை விதிக்கப்படுகிறது. 

மாநிலத்தில் தற்போது தினசரி சுமார் 60 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை ஒரு லட்சமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள், ஐ.சி.யூ. வார்டு வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் முன்பு அமைக்கப்பட்ட குழுக்கள் மீண்டும் செயல்படும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணியை அந்த குழுக்கள் தற்போது மேற்கொள்ளும்.

குளிர்கால கூட்டத்தொடர்

மருந்துகள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தேவையான அளவுக்கு மருந்துகளை கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதிப்பது குறித்து பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

அதுபற்றி இன்று (அதாவது நேற்று) நாங்கள் விவாதிக்கவில்லை. திட்டமிட்டப்படி பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். பெங்களூருவில் தான் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. அதனால் பெலகாவியில் கூட்டத்தொடர் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக பெலகாவியில் கூட்டத்தொடர் நடைபெறவில்லை. ஆனால் இந்த கூட்டத்தொடரை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

Next Story