ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 150 படுக்கைகள் தயார்
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 150 படுக்கைகள் தயார்
நாகர்கோவில்:
ஒமைக்ரான் என்ற உருமாறிய வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் புதிய வைரஸ் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இதே போல குமரி மாவட்டத்திலும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
எனினும் நோய் பரவல் ஏற்பட்டால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக புதிய வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 150 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது மருத்துவக்கல்லூரியில் ஏற்கனவே உள்ள 800 படுக்கைகளில் இருந்து 150 படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவாக அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே ஒமைக்ரான் வைரஸ் பரவி இருக்கிறதா? என்பதை கண்டறிய மாவட்டம் தோறும் சந்தேகப்படும் படியான கொரோனா நோயாளிகளின் சளி மாதிரியை சென்னைக்கு அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் இருந்து 8 பேரின் சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அப்போது 8 பேருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. எனினும் புதிய வைரஸ் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story