ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 156 பேர் கைது


ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 156 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2021 3:19 AM IST (Updated: 4 Dec 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி சேலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் பங்கேற்றனர். இதில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 156 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,
மறியல் போராட்டம்
கட்டுமான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் கண்காணிப்பு கூட்டங்களை மாதம் ஒருமுறை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் ஜில்லா கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று காலை கட்டுமான தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு செயல் தலைவர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
156 பேர் கைது
மேலும் அங்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 81 பெண்கள் உள்பட 156 பேரை போலீசார் கைது செய்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு வேனில் அழைத்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story