கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42685 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் 42685 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் 42,685 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் தின விழா
கிருஷ்ணகிரி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.83 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 21 வகையான மாற்றுத்திறனாளிகள் 42,685 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 10 வயது பூர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரியத்தில் 33 ஆயிரத்து 947 பேர் உறுப்பினர்களாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதாந்திர உதவித்தொகையாக 4,890 பேருக்கு மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
கண்காணிக்க வேண்டும்
சமீபத்தில் நடந்து முடிந்த ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 6,147 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 1,121 பேருக்கு புதிதாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 633 பேருக்கு பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் சரியாக சென்று அடைகிறதா? என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
தடுப்பூசி
மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவுகள் மேற்கொள்ளபடாத மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உரிய கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவுக்கான சான்றுகளை வழங்கலாம். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் அருகில் உள்ள ஆரம்ப கால சுகாதார நிலையம் அல்லது முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story