தர்மபுரி நகராட்சி பகுதியில் வாடகை செலுத்தாத 37 கடைகளுக்கு பூட்டு ரூ 28 லட்சம் பாக்கி வசூல்
தர்மபுரி நகராட்சி பகுதியில் வாடகை செலுத்தாத 37 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் மூலம் ரூ28 லட்சம் பாக்கி வசூல் ஆனது.
தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி பகுதியில் வாடகை செலுத்தாத 37 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் மூலம் ரூ.28 லட்சம் பாக்கி வசூல் ஆனது.
வாடகை பாக்கி
தர்மபுரி நகர பகுதியில் பஸ் நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளில் வாடகை பாக்கியுள்ள கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் உடனே வாடகை தொகையை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பினர். தொடர்ந்து வாடகை பாக்கி செலுத்த நகராட்சி சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தர்மபுரி நகரில் வாடகை பாக்கி உள்ள 87 கடைகளுக்கு நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதையன், துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜன், துப்புரவு மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் பணியாளர்கள் சென்றனர். நகராட்சிக்கு வாடகை பாக்கி உள்ள 37 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.
வாடகை பாக்கி வசூல்
இதைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.28 லட்சம் வாடகை பாக்கி தொகை வசூல் ஆனது. இதேபோன்று நகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்த வேண்டிய 120 கடைகளுக்கு தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் கூறுகையில், தர்மபுரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகை, குடிநீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரியிணங்களை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக செலுத்த அறிவிக்கப்படுகிறது. நகராட்சி அறிவிப்பை பொருட்படுத்தாமல் மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story