நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்று சிகிச்சைக்கு தனி வார்டு தயார்
ஒமைக்ரான் தொற்று சிகிச்சைக்கு100 படுக்கைகளுடன் தனி வார்டு தயார்
நெல்லை:
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்று சிகிச்சைக்கு 100 படுக்கைகளுடன் தனி வார்டு தயார் நிலையில் உள்ளது என்று டீன் ரவிச்சந்திரன் கூறினார்.
ஒமைக்ரான் வைரஸ்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிர்வலைகள் குறைந்துள்ள நிலையில், அந்த வைரஸ் மருவி ஒமைக்ரான் வைரசாக பரவத் தொடங்கி உள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
இதையொட்டி தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெல்ைல அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கலெக்டர் விஷ்ணு, ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் ஆகியோர் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
100 படுக்கைகள் தயார்
அதன்படி ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் தனி வார்டு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கண்டறியப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய், கண் சிகிச்சை கட்டிடங்களில் தற்போது கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இதில் தனியாக 100 படுக்கைகள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தயார் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை விட ஒமைக்ரான் வேகமாக பரவும். ஆனால் தற்போது பரவல் இல்லை. இதன் அறிகுறியாக சாதாரண காய்ச்சல் இல்லாமல் உடல்வலி, கடுமையான இருமல் ஏற்படும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக தெரியவில்லை.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கை, கால் ஊனமுற்றவர்களுக்கு திங்கட்கிழமைதோறும் மயோபதி சிகிச்சை முகாம் நடத்தப்படும். முதுகு தண்டுவட காயம், நோய் உள்ளவர்களுக்கு புதன்கிழமை தோறும் தனி சிகிச்சை மையம் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் தினம்
முன்னதாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கை, கால் ஊனமுற்றவர்களுக்கு எலும்பு அடர்த்தி, நரம்பு பாதிப்புகள் கண்டறியும் பரிசோதனை மற்றும் சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் விரிவு, காற்று குழாய் அடைப்பு உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
டீன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், எலும்பு முறிவு துறை தலைவர் மணிகண்டன், பேராசிரியர் உதயசிங், நர்சிங் பயிற்றுனர் செல்வம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story