உள்ளாட்சி தணிக்கை அதிகாரியின் மனைவி வங்கி லாக்கரில் 266 பவுன் நகைகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கண்டுபிடிப்பு


உள்ளாட்சி தணிக்கை அதிகாரியின் மனைவி வங்கி லாக்கரில் 266 பவுன் நகைகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 4:36 AM IST (Updated: 4 Dec 2021 4:36 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தணிக்கை அதிகாரியின் மனைவி வங்கி லாக்கரில் 266 பவுன் நகைகள்

நெல்லை:
உள்ளாட்சி தணிக்கை அதிகாரியின் மனைவி வங்கி லாக்கரில் 266 பவுன் நகைகள் இருந்தது லஞ்சஒழிப்பு போலீசார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தணிக்கை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய 5 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ளாட்சி கணக்கு தணிக்கை கடந்த 29-ந்தேதி ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. தென்காசி மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் முகமது லெப்பை, தென்காசி தணிக்கை துறை அதிகாரி உமாசங்கர் ஆகியோர் கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் அதிகளவில் பணம் புழங்குவதாக நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்கால் தலைமையில் போலீசார் ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பஞ்சாயத்து செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடமும் சோதனை நடந்தது. இதில் சில ஆவணங்களும், கணக்கில் வராத ரூ.88 ஆயிரத்து 680-ம் கைப்பற்றப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு சோதனை
இதுதொடர்பாக தணிக்கை குழு உதவி இயக்குனர்கள், தணிக்கை ஆய்வாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள உள்ளாட்சி தணிக்கை துறை உதவி இயக்குனர் முகமது லெப்பை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையில் சோதனை நடத்தினார்கள். அப்போது சில ஆவணங்கள், தகவல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது.
266 பவுன் நகைகள்
இதையடுத்து தணிக்கை துறை உதவி இயக்குனர் முகமது லெப்பை மனைவி பாத்திமுத்துவுக்கு மேலப்பாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் லாக்கர் உள்ளது. அந்த லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். அதில் 266 பவுன் தங்க நகையும், ரூ.7 லட்சத்து 300 ரொக்கப் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து இந்த பணம், நகை எப்படி வந்தது? என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story