தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீத முடிவு: பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீத முடிவு: பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Dec 2021 8:55 AM GMT (Updated: 2021-12-04T14:25:13+05:30)

தாம்பரத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்,

தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், சீனிவாசன் நகர், திரவுபதி தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 45). இவர் மேல்மருவத்தூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி மகேஸ்வரி (40). தம்பதிகளுக்கு கார்த்திகேயன் (17) என்ற மகன் இருந்தார். இந்த நிலையில், கார்த்திகேயன் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்ததால் கார்த்திகேயன் மன உளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை வீட்டின் படுக்கை அறைக்குள் சென்ற அவர் வெளியே வரவில்லை என்று தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த தாய் மகேஸ்வரி கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது. கார்த்திகேயன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட அவர் கதறி அழுத்த காண்போரை கண்கலங்க செய்தது.

இது குறித்து தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து போன கார்த்திகேயன் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story