பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்மாதிரியாக இருக்கும்


பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்மாதிரியாக இருக்கும்
x
தினத்தந்தி 4 Dec 2021 6:45 PM IST (Updated: 4 Dec 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி உள்ளதாகவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்மாதிரியாக இருக்கும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் டி.மோகன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனாவை விட ஒமைக்ரான் வைரஸ் பரவல் 4, 5 மடங்கு வேகம் கூடுதலாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஒருவருக்கு வந்தால் 40, 50 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த வைரஸ் தாக்கம் இருக்கக்கூடாது என்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வரும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் விதித்து கண்காணிக்க முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுக்கும் விதமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்புள்ள 11 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்புகள் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், அந்த வகையில் இங்கிலாந்து, சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேருக்கு பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டதால் அவர்களுக்கு உருமாற்றம் அடைந்த கொரோனாவா, ஒமைக்ரான் வைரசா என்று கண்டறிய பரிசோதனை எடுக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது, 2 நாட்களில் அதன் முடிவுகள் கிடைக்கும்.

பூஸ்டர் தடுப்பூசி

மேலும் இன்றைய தினம் இங்கிலாந்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு பாசிட்டிவ் வந்துள்ளதால் தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறி உள்ள நபர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தும் பணி விரைவாக நடந்து வருகிறது. பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வரப்பெற்றதும், அந்த தடுப்பூசியை செலுத்துவதிலும் தமிழகம் முன்மாதிரியாக இருக்கும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 4,848 செவிலியர்களையும், 2,468 சுகாதார ஆய்வாளர்களும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற பணியிடங்களை நிரப்பவும், முன்பு இதே பணியில் இருந்த நபர்களுக்கு பணி வழங்க 20 சதவீத மதிப்பெண் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒமைக்ரான் சிறப்பு வார்டு

தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் சிறப்பு வார்டை அமைச்சர்கள் சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து கண்டமங்கலம் ஒன்றியம் சிறுவந்தாடு சென்ற அமைச்சர்கள் சுப்பிரமணியன், பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் அங்கு நடைபெற்ற தடுப்பூசி மையத்தை பார்வையிட்டதோடு அங்கு மக்களை தேடி மருத்துவம் திட்ட பயனாளிகளை வீடு சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர். பின்னர் சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, செஞ்சி ஒன்றியம் ஒட்டப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செஞ்சி அரசு மருத்துவமனை, மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி ஆரம்ப சுகாதார நிலையம், மயிலம் ஒன்றியம் வெங்கந்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தனர். பின்னர் திண்டிவனம் இந்திரா நகர் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்ட பயனாளிகளை வீடு சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர். தொடர்ந்து, திண்டிவனம் பயணியர் மாளிகை அருகில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டனர். ஆய்வின்போது விக்கிரவாண்டி ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா அரசி ரவிதுரை, துணைத்தலைவர் ஜீவிதா ரவி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயரவிதுரை, வேம்பி ரவி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story