வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
தளி,
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது.
பயிற்சி முகாம்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் நேற்று மாவட்ட வனஅலுவலத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் வருகின்ற 11-ந் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் கூறியதாவது:-
53 நேர் கோட்டு பாதைகள்
தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டுதலுடன் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் உத்தரவின்படி மாவட்ட வனஅலுவலர் மற்றும் துணை இயக்குனர் தேஜஸ்வி அறிவுரையின் படி குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அதன்படி உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வனசரகங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர் கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
3 நாட்கள் கணக்கெடுப்பு
அப்போது முதல் 3 நாட்களில் (05.12.2021 முதல் 07.12.2021) சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடையங்கள் பதிவு செய்யப்படும். அடுத்த 3 நாட்களில் (08.12.2021 முதல் 10.12.2021) நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் இறை விலங்குகள், தாவரங்கள், மனித இடையூறுகள், குளம்பினங்களின் எச்சம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. மேலும் அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது.
இறுதிநாளான 11-ந்தேதி கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த முகாமில் வனச்சரக அலுவலர்கள் தனபாலன், சுரேஸ், முருகேசன், மகேஸ் உள்ளிட்ட வனவர்கள், வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story