மிளகாய் சாகுபடி மும்முரம்
மிளகாய் சாகுபடி மும்முரம்
குடிமங்கலம்,
குடிமங்கலம் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் மிளகாய் சாகுபடி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மிளகாய் சாகுபடி
குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டு தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்னை நீண்ட காலப்பயிர் என்பதால் விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் சொட்டுநீர் பாசன முறையில் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பச்சை மிளகாய் பொதுவாக அன்றாட உணவுகளில் அதிக அளவு பயன்படுத்தக்கூடியது. சைவம், அசைவம் என 2 உணவுகளில் பச்சை மிளகாய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய் சாகுபடி செய்வதால் எல்லா காலங்களிலும் நல்ல லாபம் ஈட்ட முடியும். நல்ல வடிகால் வசதியுடைய நிலங்களில் மிளகாய் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாகும்.
அதிக லாபம்
மிளகாய் சாகுபடி செய்வது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-
ஒரு ஏக்கர் சாகுபடி செய்வதற்கு 400 கிராம் விதை தேவைப்படுகிறது நாற்றங்கால் அமைத்து 40 நாட்களுக்குப்பிறகு பிடுங்கி நடவு செய்யலாம் அல்லது நாற்று வாங்கி நடவு செய்யலாம். நாற்றுக்கள் நடவு செய்த 30 நாட்களுக்குப்பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து நிறைவு செய்வது அவசியம். பச்சை மிளகாயை நட்ட 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலிருந்து அறுவடை செய்யலாம்.
மேலும் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்களுக்கு பச்சை மிளகாய் அறுவடை செய்யப்படும். முதல் 2 பறிப்புகளில் பச்சை மிளகாயும், அடுத்த பறிப்புகளில் இருந்து பழுத்த மிளகாய் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 8 டன் வரை மகசூல் கொடுக்கும். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் மிளகாய் உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story