உலர்களத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றிய பேரூராட்சி
உலர்களத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றிய பேரூராட்சி
குமரலிங்கம்,
குமரலிங்கம் பகுதியில் உலர் களத்தை குப்பைகள் கொட்டும் இடமாக குமரலிங்கம் பேரூராட்சி மாற்றியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பாசன பகுதியில் உலர் களம்
குமரலிங்கம் பகுதியில் விவசாயம் முக்கியத்தொழில் ஆகும். நெல், உளுந்து, சோளம் போன்ற தானிய பயிர்களும், மானாவாரியில் மக்காச்சோளம் மிக அதிக அளவிலும் சாகுபடி நடைபெறும். சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அறுவடை முடிந்ததும் தானியங்களை உலர் களத்தில் உலர்த்தி வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் உலர்களத்திற்கே வந்து தானியங்களை வாங்கிச்செல்வார்கள்.
இவ்வாறு தானியங்களை உலர்த்துவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜ வாய்க்கால் கரை பகுதியில் விவசாயிகளின் நலனுக்காக உலர் களம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே பராமரிப்பில்லாமல் இருந்த இந்தக்களம் தற்போது குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குமரலிங்கம் பகுதியிலுள்ள குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றி வருகிறார்கள்.
விவசாயிகள் வேதனை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இந்தப் பகுதி பாறைகள் நிறைந்த பகுதியாகும். ஆரம்ப காலத்தில் இந்தப்பகுதியில் உள்ள பாறைகளில் தான் தானியங்களை காய வைப்போம். இந்தப் பகுதி விவசாயிகளின் நலனுக்காக ராஜவாய்க்கால் கரையோரப் பகுதியிலேயே உலர் களம் அமைக்கப்பட்டது.
இந்த பகுதி விவசாயிகள் உலர்களத்தை பயன்படுத்தி பயனடைந்து வந்தனர். நாளடைவில் இந்தப் பகுதிக்கான வழித்தடம் முறையாக பராமரிப்பு இல்லாததால் வழித்தடங்கள் வீணாகிப் போனது.
குப்பை கொட்டும் இடமாக....
விவசாயிகளும் இந்தப் பகுதிக்கு வருவதை தவிர்த்து விட்டனர். அந்த உலர் களம் சேதமடைந்து வீணாகக் கிடக்கிறது. தற்சமயம் குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகம் இந்த உலர்களத்தை பராமரித்து விவசாய பயன்பாட்டிற்கு உதவாமல் ஒட்டுமொத்த குப்பைகளையும் கொட்டும் இடமாக மாற்றி வருகிறது. இதனால் ராஜவாய்க்கால் பகுதியிலும் அருகில் உள்ள வயல் வெளிகளிலும் குப்பைகள் கலக்க வாய்ப்பு உள்ளது.
அந்த இடத்திற்கு வரும் வரை ராஜவாய்க்கால் தண்ணீர் நன்றாகவே உள்ளது. அந்த இடத்திலிருந்து சாக்கடைகளும், குப்பைகளும் கலப்பதால் நீர்மாசு அடைகிறது. அந்தப்பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. குப்பைகளை ஊருக்கு வெளியே கொண்டு கொட்ட பேரூராட்சிக்கு எவ்வளவோ இடமிருந்தும் பராமரிக்க வேண்டிய உலர் களத்தை பேரூராட்சி நிர்வாகமே குப்பை கொட்டும் இடமாக ஆக்குவதை கண்ட இந்தப் பகுதிவிவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story