2-ம் கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு


2-ம் கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 7:47 PM IST (Updated: 4 Dec 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பகத்தில் 2-ம் கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் 2-ம் கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இங்கு காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கூடலூர், முதுமலை பகுதியில் 6 மாதங்கள் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. 

இதை கருத்தில் கொண்டு வனவிலங்குகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்வதற்காக பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்வட்ட பகுதியான தெப்பக்காடு, முதுமலை கார்குடி, நெலாக்கோட்டை, மசினகுடி வனச்சரக பகுதியில் 130-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 

வெளிமண்டல பகுதி

தற்போது 2-வது கட்டமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிமண்டல பகுதியான சிங்காரா, சீகூர், நீலகிரி மேற்கு பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் வன ஊழியர்கள் மேற்கொள்ளவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் தெப்பக்காடு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. வனச்சரகர்கள் முரளி உள்ளிட்ட வன அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். 

அப்போது வனவிலங்குகளை நேரில் காணுதல், கால் மற்றும் எச்சங்கள் தடயங்களை அடையாளம் காணுதல் முறையில் கணக்கெடுப்பு குறித்து விளக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வருகிற 10-ந் தேதி வரை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அதில் சேகரித்த விவரங்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப்படும் என்றனர்.


Next Story