குன்னூர் வழியாக கடத்திய ரூ.8¼ லட்சம் குட்கா பறிமுதல்


குன்னூர் வழியாக கடத்திய ரூ.8¼ லட்சம் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 4 Dec 2021 7:47 PM IST (Updated: 4 Dec 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து கோவைக்கு குன்னூர் வழியாக கடத்திய ரூ.8¼ லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குன்னூர்

கர்நாடகாவில் இருந்து கோவைக்கு குன்னூர் வழியாக கடத்திய ரூ.8¼ லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா பதுக்கல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அதன் டிரைவரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். 

இதனால் லாரியில் ஏறி போலீசார் சோதனை செய்தனர். அப்போது தேங்காய் மட்டைகளுக்கு இடையே மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனே அந்த மூட்டைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டனர். 

ரூ.8¼ லட்சம் மதிப்பு

இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த 75 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். 

அதில் அவர்கள் கர்நாடக மாநிலம் குண்டல்பெட்டில் இருந்து கூடலூர், குன்னூர் வழியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு குட்கா மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா கடத்திய குண்டல்பெட் பகுதியை சேர்ந்த ராஜூ(வயது 29), குருராஜி(24), சுரேஷ்(28) ஆகிய 3 பேரை கைது செய்து குன்னூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடலூர் பகுதியில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story