திருப்பூரில் நேற்று தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ100க்கு விற்பனை
திருப்பூரில் நேற்று தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ100க்கு விற்பனை
திருப்பூர்,
தொடர் மழை காரணமாக திருப்பூரில் நேற்று தக்காளி விலை கிடு,கிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இல்லத்தரசிகள் ஆறுதல்
தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்த காரணத்தால் ஆங்காங்கே விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்து பயிர்கள் நாசமடைந்தன.குறிப்பாக தக்காளி அதிக அளவில் சேதமடைந்ததால் தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை திடீரென உயர்ந்தது. ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. திருப்பூரிலும் இதே நிலை நீடித்ததால் இல்லத்தரசிகள் நிலைகுலைந்து போயினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு சற்று குறைந்ததால் தக்காளி விலை படிப்படியாக குறைந்து, தரத்திற்கேற்றவாறு ஒரு கிலோ ரூ.60 முதல் 80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மீண்டும் ரூ.100-க்கு விற்பனை
இந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் மழை அதிகரித்துள்ளதால் மீண்டும் தக்காளி வரத்து குறைய தொடங்கியுள்ளது. திருப்பூருக்கு கடந்த சில தினங்களாக சுமார் 7 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சுமார் 4 டன் தக்காளி மட்டுமே வருகிறது. இதனால் நேற்று தென்னம்பாளையம் மொத்த மார்க்கெட்டில் 28 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி அதிகபட்சமாக ரூ.2300-க்கும், 14 கிலோ எடை கொண்ட டிப்பர் ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன்காரணமாக சில்லறை விலையாக ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் விலை அதிகரித்தாலும் தக்காளியை வாங்குவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலையேற்றம் எதுவரைக்கும் போகுமோ என இல்லத்தரசிகள் கவலையடைய தொடங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story