தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு


தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 4 Dec 2021 8:34 PM IST (Updated: 4 Dec 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

கூடலூர்:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 மலைப்பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். அதேபோல் கேரளாவில் இருந்து ஏராளமானோர் இந்த 3 மலைப்பாதைகள் வழியாக தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இதனால் இந்த 3 மலைப்பாதைகளிலும் தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக சுகாதாரத்துறையினர் சோதனை சாவடிகளில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தநிலையில் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதற்கிடையே குமுளி சோதனை சாவடியில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கேரளாவில் இருந்து வாகனங்களில் தமிழகத்திற்கு வரும் அனைவரிடமும் தடுப்பூசி செலுத்திய விவரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் உள்ளனவா? என்று பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினரை அறிவுறுத்தினார்.

Next Story