கலெக்டர் திடீர் வாகன தணிக்கை; முக கவசம் அணியாத 70 பேருக்கு அபராதம்
ஆண்டிப்பட்டி அருகே கலெக்டர் முரளிதரன் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது முக கவசம் அணியாத 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி:
ஆண்டிப்பட்டி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் முரளிதரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கொத்தப்பட்டி பகுதியில் கலெக்டர் திடீரென சாலையில் நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை கண்டித்தார். மேலும், அவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் அங்கு வந்து முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதேபோல் கோத்தலூத்து, கன்னியப்பபிள்ளைப்பட்டி ஆகிய இடங்களிலும் கலெக்டர் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்களை நிறுத்தி சோதனையிட்டார். பஸ்களில் முக கவசம் அணியாமல் பயணம் செய்த பொதுமக்களுக்கும், டிரைவர், கண்டக்டர்களுக்கும் அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பஸ்களில் பயணம் செய்த பயணிகளிடம் முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறினார்.
மேலும் ஆய்வு செய்ய சென்ற இடங்களில் டீக்கடைகள், பஸ் நிறுத்தங்களில் முக கவசம் அணியாமல் நின்றவர்களையும் கலெக்டர் கண்டித்து, அவர்களுக்கும் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அந்த வகையில் கலெக்டரின் நேற்றைய ஆய்வின் போது மட்டும் முக கவசம் அணியாமல் இருந்த 70-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story