கம்பத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கம்பம்:
கம்பத்தில் 2 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. இதில் 2-வது பணிமனையில் உள்ள மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று காலை 4.15 மணி அளவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கம்பம் பணிமனை 2-ல் திண்டுக்கல் வழித்தடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய டிரைவர்களை, வேறு வழித்தடங்களுக்கு பணி மாற்றம் செய்து போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல் திண்டுக்கல் வழித்தடத்தில் தொ.மு.ச. தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்களுக்கு பணி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 1 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் போராட்ட களத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துக்கழகத்தின் திண்டுக்கல் கோட்ட மேலாளர்கள் சரவணன், அறிவானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தற்காலிகமாக குறிப்பிட்ட வழித்தடத்தில் 2 தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள் பஸ்களை ஓட்ட வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட தொழிற்சங்க மாநில நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினர். இதையடுத்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கம்பம் பணிமனை 2-ல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story