மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க 9 இடங்களில் போலீசார் கண்காணிப்பு
தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க 9 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்:
கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நக்சல் தடுப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டு வனப்பகுதிகளில் கண்காணிப்பு நடக்கிறது. அவர்கள் கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, சிறுமலை உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வனப்பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரள வனப்பகுதியில் அவ்வப்போது மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதனால் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள கொடைக்கானல், தாண்டிக்குடி வனப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையொட்டி நக்சல் தடுப்பு படையினர் நவீன துப்பாக்கியுடன் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் தமிழக-கேரள எல்லைக்கு அருகே அமைந்துள்ள வனப்பகுதிகள் கண்டறியப்பட்டன.
அந்த வகையில் மண்திட்டு, கிளாவரை, பொந்துபுளி உள்பட 9 இடங்களில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலைக்கிராமங்களில் போலீசார் மாறுவேடத்தில் தங்கி இருந்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story