மோட்டார் மூலம் வெளியேற்றும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் கடலூரில் பரபரப்பு


மோட்டார் மூலம் வெளியேற்றும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் கடலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 9:07 PM IST (Updated: 4 Dec 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

கடலூாில் மோட்டார் மூலம் வெளியேற்றும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூர், 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூரில் கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. 

இதையடுத்து மழை ஓய்ந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது. இதற்கிடையே கடலூர் எஸ்.என்.சாவடி அபிராமி நகர் பகுதியில் தேங்கிய மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி, கழிவுநீருடன் கலந்து அருகில் உள்ள தீபன்நகர், ரட்சகர் நகர், திருமூர்த்தி கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்து, வீடுகளை சுற்றிலும் தேங்கி நிற்கிறது. 

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் துர்நாற்றத்தால் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை சாவடியில் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலைக்கு திரண்டு வந்தனர். 

பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அவர்கள், குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story