நாகை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 689 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர் கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்
நாகை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 689 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
நாகப்பட்டினம்:-
நாகை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 689 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
கொரோனா தடுப்பூசி
நாகை மாவட்டத்தில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிக்கல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்றக்கட்டிடம், ஆழியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம், அத்திப்புலியூர் ஊராட்சியில் உள்ள நலவாழ்வு மைய கட்டிடம், கூத்தூர் அரசினர் நடுநிலைப்பள்ளி, இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பட்டமங்களம் ஊராட்சிமன்ற கட்டிடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினையும், கடம்பங்குடி கிராமத்தில் வீடு வீடாகச்சென்று தடுப்பூசி போடும் பணியையும் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாபெரும் முகாம்
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையாக கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் இன்று (நேற்று) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் 400 சிறப்பு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
வீடுவீடாக சென்றும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த முகாம்கள் நடந்தன. கடந்த 3-ந் தேதி நாகை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 20 ஆயிரத்து 689 பேர் போட்டுள்ளனர். 2-ம் தவணையாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 466 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தம் 7 லட்சத்து 12 ஆயிரத்து 155 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மழை பாதிப்புகள் ஆய்வு
நாகை மாவட்டம் திருமருகலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழையில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து திருப்புகலூரில் உள்ள அங்கன்வாடியில் ஆய்வு மேற்கொண்டு ஒமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். ஆய்வின் போது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கவுதமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், திருமருகல் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசெங்குட்டுவன், திருமருகல் துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார், திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story