படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் நாகைக்கு திட்டச்சேரி வழியாக கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தல்


படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் நாகைக்கு திட்டச்சேரி வழியாக கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Dec 2021 9:19 PM IST (Updated: 4 Dec 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

படிக்கட்டுகளில் தொங்கி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலையில் நாகைக்கு திட்டச்சேரி வழியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

திட்டச்சேரி:-

படிக்கட்டுகளில் தொங்கி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலையில் நாகைக்கு திட்டச்சேரி வழியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கூட்ட நெரிசல்

நாகை மாவட்டம் திருமருகல், திட்டச்சேரி, சியாத்தமங்கை, அண்ணாமண்டபம், குருவாடி, திருப்புகலூர், வவ்வாலடி, ஏனங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் நாகையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். 
இந்த நிலையில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இயக்கப்படும் பஸ்களில் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் என அதிக எண்ணிக்கையில் பயணம் செய்து வருகின்றனர். திருமருகல், திட்டச்சேரி, பனங்குடி ஆகிய பகுதிகளில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பஸ்களில் இருக்கை கிடைப்பதில்லை. தினமும் அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். 

விபத்து ஏற்படும் அபாயம்

படிக்கட்டுக்கள் உடைந்து விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர பஸ் வசதி இல்லாத சூழலும் உள்ளது. 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திட்டச்சேரி வழியாக நாகைக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story