கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் ஆடுகள் பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  100 சதவீதம் மானியத்தில் ஆடுகள் பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2021 10:25 PM IST (Updated: 4 Dec 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் ஆடுகளை பெறுவதற்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

900 பெண்களுக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண் பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வீதம் 900 பெண் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயனாளிகள் வறுமையில் வாடும் அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் ஏழ்மை நிலையில் வசிக்கும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களாக இருக்க வேண்டும். நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளராக இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள இதர உறுப்பினர்கள் உள்பட எவருக்கும் சொந்தமாக அவர்கள் பெயரில் நிலம் இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

முதல் பயனாளியாக

விண்ணப்பதாரர்கள் தற்போது கறவைப்பசு, வெள்ளாடு அல்லது செம்மறியாடு ஆகியவற்றை சொந்தமாக வைத்திருக்க கூடாது. மாநில அல்லது மத்திய அரசிலோ அல்லது அதன் ஏதாவதொரு அமைப்பிலோ பணிபுரியும் ஊழியராகவோ அல்லது கூட்டுறவு தொடர்பான அல்லது உள்ளாட்சி அமைப்பில் உறுப்பினராகவோ இருக்கக் கூடாது. 
விண்ணப்பிக்கும் நபரின் கணவர், தந்தை, தாய், மாமனார், மாமியார், மகள், மகன், மருமகள், மருமகன் அல்லது ஏதேனும் உறவு வகையோ கொண்டிருக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள சிறு அசையூண் பிராணிகள் வளர்க்கவுள்ள முதல் முறை அல்லது முதல் தடவை பயனாளிகளாக இருந்திட வேண்டும் என்பதை விண்ணப்பிப்பவரும், துறையும் உறுதி செய்திட வேண்டும். ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம் அல்லது விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் ஊரக புறக்கடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றவராக இருக்க கூடாது.

கடைசிநாள்

மேலும் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஒரு புகைப்படம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தை அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து வருகிற 9-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் ஒப்படைக்க வேண்டும். 
விண்ணப்ப படிவத்தில் கிராம நிர்வாக அலுவலர் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளதா அல்லது இல்லையா? என்றும் நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர் என்பதனை உறுதி செய்தும், அரசாணையின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளையும் சரிபார்த்து விண்ணப்ப படிவங்களில் சான்றை அளிக்கும் வகையில் அவரது கையொப்பமிட்டு திருப்பி கால்நடை உதவி மருத்துவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story