திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் முகத்தில் திராவகம் வீசிய பெண்
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் முகத்தில் திராவகம் வீசிய பெண்
கோவை
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் முகத்தில் பெண் ஒருவர் திராவகம் வீசினார். மேலும் அவர், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மசாஜ் சென்டர் ஊழியர்கள்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கொடிப்புரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ராகேஷ் (வயது 30). இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள மசாஜ் சென்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே மசாஜ் சென்டரில் செங்கல்பட்டு மாவட்டம் மீனம்பாக்கம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ஜெயந்தி (27) என்பவரும் ஊழியராக வேலை பார்த்தார். ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து துபாயில் வேலை பார்த்து வந்தார்.
ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் 2 பேரும் நட்பாக பழக ஆரம்பித்தனர். நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது தங்கை திருமணத்திற்காக, தான் கேரளாவுக்கு செல்ல உள்ளதாக ஜெயந்தியிடம் ராகேஷ் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் துபாயில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்தனர்.
ராகேஷ் திருவனந்தபுரத்துக்கும், ஜெயந்தி காஞ்சீபுரத்திற்கும் சென்று விட்டனர். அதன்பின்னர் 2 பேரும் நேரில் சந்திக்கவில்லை. செல்போனில் மட்டும் பேசி வந்ததாக தெரிகிறது.
திருமணம்
இதற்கிடையே ராகேசுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது. இது ஜெயந்திக்கு தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராகேஷ் கோவை வந்து தொழில் தொடங்குவதற்கு திட்டமிட்டு, வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
அப்போது தனக்கு திருணமானது குறித்து ஜெயந்திக்கு தெரிவிக்க விரும்பிய ராகேஷ், தனது திருமண புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலம் ஜெயந்திக்கு அனுப்பி உள்ளார்.
தகராறு
அதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக ராகேசை தொடர்பு கொண்டு என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு வேறு ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்டு உள்ளார்.
அதற்கு ராகேஷ், ‘இதுகுறித்து நாம் 2 பேரும் நேரில் சந்தித்து பேசலாம். நான் சொல்கின்ற இடத்திற்கு நீ வா’ என ஜெயந்தியை அழைத்து உள்ளார்.
அதன்படி கோவை வந்த ஜெயந்தி, நேற்று கோவை பீளமேடு பகுதிக்கு வந்தார். அங்கு ராகேசும் வந்தார். இருவரும் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிக்கு சென்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது, ஜெயந்தி, ராகேசிடம் துபாயில் இருக்கும் போது நீ என்னை தானே திருமணம் செய்து கொள்வதாக கூறினாய். ஆனால் தற்போது வேறு ஒரு பெண்ணை திருணம் செய்து உள்ளாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். அதற்கு ராகேஷ் எந்த பதிலும் தெரிவிக்கமால் உனது போனை கொடு என கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்தார். பின்னர் செல்போனை பறித்து தான் அனுப்பிய புகைப்படங்களை ராகேஷ் அழித்து விட்டார். இதனால் ஜெயந்தி ஆத்திரம் அடைந்தார்.
முகத்தில் திராவகம் வீச்சு
தன்னை ஏமாற்றிய காதலனை வஞ்சம் தீர்ப்பதற்காக ஜெயந்தி, ஏற்கனவே கைப்பையில் மறைத்து கொண்டு வந்திருந்த திராவக பாட்டிலை எடுத்து திறந்து திடீரென ராகேசின் முகத்தில் வீசினார். மேலும் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து அவரின் கையில் குத்தினார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ராகேஷ் நிலைகுலைந்து கீழே விழுந்தார். திராவகம் பட்டதால் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பினார்.
தற்கொலை முயற்சி
இதற்கிடையில் ஜெயந்தியும் வாழப்பிடிக்காமல், தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து 2 பேரும் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
2 பேர் மீதும் வழக்கு
ராகேஷ் அளித்த புகாரில், ஜெயந்தி தன் மீது ஆசிட் வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்ய முயன்றார் என தெரிவித்து உள்ளார். அதேபால், ஜெயந்தி அளித்த புகாரில், ராகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் நான் அவருக்கு துபாயில் இருந்த போது செலவுக்கு பணம் கொடுத்தேன்.
எனவே என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறித்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இருவர் அளித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயந்தி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
துபாயில் மலர்ந்த காதல், கோவையில் மோதலாக மாறி திராவகம் வீச்சு, கத்திக்குத்து வரை சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story