கடத்தல் வழக்கில் பெயர் சேர்க்காமல் இருப்பதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது வேலகவுண்டம்பட்டியில் பரபரப்பு
கடத்தல் வழக்கில் பெயர் சேர்க்காமல் இருப்பதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது வேலகவுண்டம்பட்டியில் பரபரப்பு
பரமத்திவேலூர்:
ஆள் கடத்தல் வழக்கில் பெயர் சேர்க்காமல் இருப்பதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செலம்பகவுண்டம்பாளையம் ஒடுவன்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் செல்வகுமார் (வயது 42). விவசாயி. இவர் உள்பட சிலர் மீது கடந்த 2020-ம் ஆண்டு வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை அறிக்கையில் செல்வகுமார் உள்ளிட்ட 3 பேரின் பெயர்களை சேர்க்காமல் இருப்பதற்காக வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நேற்று காலை செல்வகுமார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது ஏற்கனவே அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சண்முகத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் கடத்தல் வழக்கில் பெயரை சேர்க்காமல் இருப்பதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story