பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பபெறக்கோரி போராட்டம் நாமக்கல்லில் விக்கிரமராஜா பேட்டி


பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பபெறக்கோரி போராட்டம் நாமக்கல்லில் விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2021 10:32 PM IST (Updated: 4 Dec 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பபெறக்கோரி போராட்டம் நாமக்கல்லில் விக்கிரமராஜா பேட்டி

நாமக்கல்:
பெட்ரோல், டீசல் மற்றும் வணிக உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி
நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மத்திய அரசு ரெடிமேடு சட்டைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த அனுமதி அளித்து உள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய நிதி மந்திரியை சந்திக்க உள்ளோம். இதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,000 வரை விலை உயர்ந்து உள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
தக்காளி விலை உயர்வு
வணிக உபயோகத்திற்கான சிலிண்டர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும். கொரோனா காலத்தில் உயிரிழந்த 142 வியாபாரிகளில் மிகவும் நலிவடைந்த 32 வியாபாரிகளின் பட்டியலை முதல்-அமைச்சருக்கு வழங்கி உள்ளோம். கொரோனா தொற்றின் நிலைமை சரியானவுடன் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மழைக்காலங்களில் தக்காளி விலை உயர்வு இயல்பு தான். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து இல்லை என்பதால் விலை உயர்ந்து உள்ளது. சத்தீஸ்கார் மாநிலத்தில் இருந்து தக்காளி குறைவான வாகனங்களில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் ஆகும். ஆனால் அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அதிக வாகனங்களில் தக்காளி கொண்டு வரப்பட்டதால் தக்காளி விலை குறைந்துள்ளது.
ஆன்லைன் நிறுவனங்கள்
தை மாதத்தில் காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும். அப்போது காய்கறிகளை வாங்க ஆள் இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் அரசு குறைவான விலைக்கு காய்கறிகளை வாங்கி, குளிர்பதன கிடங்குகளில் சேமித்து, இதுபோன்ற விலை உயர்வு ஏற்படும் காலங்களில் குறைவான விலைக்கு விற்பனை செய்யலாம். வெளிநாட்டில் உள்ள ஆன்லைன் நிறுவனங்கள் நமது நாட்டில் கால் பதித்துள்ளன. இதனை எதிர்த்து டெல்லியில் போராடி உள்ளோம். மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து அவர் மாவட்ட பேரமைப்பு மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். இதில் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், மாநில மூத்த துணை தலைவர் பெரியசாமி, மாநில துணை தலைவர்கள் செல்வராஜ், சங்கர், மாநில இணை செயலாளர் பத்ரி நாராயணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story