மாநாடு படத்தின் டிக்கெட் கொடுத்து ஓட்டு வேட்டை
மாநாடு படத்தின் டிக்கெட் கொடுத்து ஓட்டு வேட்டை
கோவை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநிலம், மாவட்டம், தொகுதி வாரியாக இளைஞர் காங்கிரசில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, ஐ.ஒய்.சி. என்ற செல்போன் செயலி மூலம் கடந்த நவம்பர் 7-ந் தேதி முதல் டிசம்பர் 7-ந் தேதி வரை தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் 19 வயது முதல் 35 வயது வரையுள்ள கட்சியின் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும்.கடந்த ஒரு மாதமாக செயலி மூலம் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் நிறைவடைய சில தினங்கள் மட்டுமே இருக்கின்றன.
இந்தநிலையில் கோவையில் இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தலில், அந்த கட்சியை சேர்ந்த பலர் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக இளைஞர்களை கட்சியில் சேர்த்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இதில் சிலர் நூதன முறையை கையாள்கின்றனர். கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் பார்க்க இலவசமாக டிக்கெட் வாங்கிக்கொண்டு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது அவர்களுடைய ஆதார் கார்டு அல்லது ஓட்டுனர் உரிமத்தை வாங்கி, பதிவு செய்து கட்சியில் சேர்த்து ஓட்டுபோட வைக்கின்றனர். பின்னர் அவர்களுக்கு இலவசமாக மாநாடு படம் பார்க்க டிக்கெட் வழங்குகின்றனர். அதில் ஒரு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கூறும்போது, எத்தனைபேர் இருந்தாலும் ஆதார் கார்டு எடுத்து வரச்சொல்லுங்கள், வரசொல்லுங்கள், அனைவருக்கும் மாநாடு திரைப்பட டிக்கெட்டை இலவசமாக தருகிறோம் என்றார்.
படம் பார்க்க டிக்கெட் இலவசம் என்பதால் பல இளைஞர்கள் தங்களது நண்பர்களையும் அழைத்து வந்து இளைஞர் காங்கிரசுக்கு ஆன்லைன் மூலம் வாக்களித்துவிட்டு மாநாடு திரைப்படத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து செல்வதாக கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.தியேட்டருக்கு மாநாடு திரைப்படம் பார்க்க வருபவர்களிடம் இளைஞர் காங்கிரசார் இலவச டிக்கெட் மற்றும் ஆள் சேர்ப்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story