கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவர் பிணமாக மீட்பு


கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 10:37 PM IST (Updated: 4 Dec 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

புன்னக்காயலில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

ஆறுமுகநேரி:
புன்னக்காயலில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவர் பிணமாக மீட்கப்பட்டாா்.

பள்ளி மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மீனவ கிராமமான புன்னக்காயல் கிராமத்தில் 100 வீடு என்ற பகுதியை சேர்ந்தவர் ரொசில்டன். அவருடைய மகன் ஜாப்ரீன் (வயது 15). அங்குள்ள புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இவருடன் அதே ஊர் வடக்கு தெருவை சேர்ந்த அலெக்ஸ் (15), தெற்கு தெருவை சேர்ந்த ஆஸ்ரின் (15) ஆகியோரும் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் 3 பேரும் புன்னக்காயல் கடற்கரையோரமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பெரிய அலை ஒன்று எழும்பி வந்துள்ளது. இதனால் 3 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இச்சம்பவத்தை பார்த்து அக்கம் பக்கத்தில் நின்ற இளைஞர்கள் ஓடி வந்து கடலுக்குள் இறங்கி ஆஸ்ரின் மற்றும் அலெக்ஸ் ஆகியோரை காப்பாற்றினார்கள்.

பிணமாக மீட்பு

ஆனால் ஜாப்ரீனை காப்பாற்ற இயலவில்லை. இதனால் உடனடியாக உள்ளூர் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடினர். மேலும் ஆத்தூர் போலீசார், தருவைகுளம் கடலோர போலீசார் மற்றும் திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் கடற்கரைக்கு வந்து ஜாப்ரீனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை வரை தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று காலை 6 மணியளவில் எந்த இடத்தில் விளையாடினாரோ அதில் இருந்து கடலில் சிறிது தூரத்திலேயே அவரது உடல் மிதந்தது.
இதனை பார்த்த மீனவர்கள் கடலுக்குள் சென்று ஜாப்ரீன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் தருவைகுளம் கடலோர போலீசார் வந்தனர். ஜாப்ரீன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் புன்னக்காயல் கிராமம் சோகத்தில் மூழ்கியது. இதையொட்டி நேற்று புன்னக்காயலில் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.

Next Story