ஒமைக்ரான் வைரஸ் அச்சம்: கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தாமல் இருந்தவர்கள் சிறப்பு முகாமில் அதிகம் வருகை


ஒமைக்ரான் வைரஸ் அச்சம்: கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தாமல் இருந்தவர்கள் சிறப்பு முகாமில் அதிகம் வருகை
x
தினத்தந்தி 4 Dec 2021 11:19 PM IST (Updated: 4 Dec 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தாமல் இருந்தவர்கள் சிறப்பு முகாமில் அதிகம் வருகை தந்தனர்.

புதுக்கோட்டை:
ஒமைக்ரான் வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் எனும் வைரஸ் தொற்று பரவ தொடங்கியிருப்பது உலக நாடுகளில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்று 2 பேருக்கு பாதித்துள்ளது. இந்த புதிய வைரஸ் நாட்டில் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
கொரோனா தடுப்பூசி போடும் பணியும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் 2 டோஸ் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சுமார் 9 லட்சம் பேருக்கு மேல் போடப்பட்டுள்ளன. இதில் முதல் டோஸ் செலுத்தியவர்கள் அதிகம். முதல் டோஸ் செலுத்திய பின் குறிப்பிட்ட நாட்களுக்கு பின் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் பலர் 2-வது டோஸ் செலுத்துவதில் காலம் தாழ்த்தினர். 
சிலர் போடாமலே இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் எனும் வைரஸ் பற்றி கேள்வி பட்டதும் சற்று அச்சமடைந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் பற்றி அறிவுறுத்தப்படுவதால் முதல் டோஸ் போட்டு, 2-வது டோஸ் போடாமல் இருந்தவர்கள் தற்போது அதனை செலுத்தி வருகின்றனர்.
சிறப்பு முகாம்
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த அதிகம் பேர் வந்திருந்தனர். இதில் பலர் குறிப்பிட்ட நாட்களை தாண்டி மாதம் கணக்கில் போடாமல் இருந்தவர்கள் ஆவார்கள். 
இதேபோல இதுவரை முதல் டோஸ் போடாமல் இருந்தவர்களும் வந்து செலுத்திக்கொண்டனர். புதுக்கோட்டையில் நகரப்பகுதியில் சிறப்பு முகாமில் பொதுமக்கள் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.
அன்னவாசல்
இலுப்பூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊராட்சி பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையுடன் இணைந்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை நேற்று நடத்தியது. இதன் ஒரு பகுதியாக அன்னவாசல் பஸ் நிலையத்தில் நடந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாமினை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் மருத்துவ குழுவினர்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை போட்டனர்.

Next Story