நண்பருடன் ஒன்றாக மது அருந்திவிட்டு பந்தயம் கட்டி நீந்தியவர் ஏரியில் மூழ்கி சாவு
நாட்டறம்பள்ளி அருகே மது அருந்திய போதையில் நண்பரிடம் பந்தயம் கட்டி ஏரியில் மறுகரைக்கு செல்லும் போட்டியில் நீந்திச்சென்ற சென்னை பேக்கரி ஊழியர் பரிதாபமாக பலியானார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே மது அருந்திய போதையில் நண்பரிடம் பந்தயம் கட்டி ஏரியில் மறுகரைக்கு செல்லும் போட்டியில் நீந்திச்சென்ற சென்னை பேக்கரி ஊழியர் பரிதாபமாக பலியானார்.
பேக்கரி ஊழியர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் கவுரவன் (வயது 38). இவர் சென்னையில் உள்ள பேக்கரி கடையில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்துள்ளார். நேற்று அதே பகுதியை சேர்ந்த அருணாசலம் மகன் பெருமாள் (30) என்ற நண்பருடன் பச்சூரை அடுத்த பொத்தான்குட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றார்.
அங்கு இருவரும் மது அருந்திவிட்டு ஏரியில் குளித்துள்ளனர். அப்போது மறுகரைக்கு யார் முந்தி செல்கிறார்களோ அவருக்கு ஆயிரம் ரூபாய் என பேசி பந்தயம் கட்டி ஏரியில் நேற்று காலை நீந்தி சென்றுள்ளனர்.
தேடுதல் வேட்டை
இந்த நிலையில் பெருமாள் மட்டும் கரையை அடைந்தார். போட்டியில் வெற்றி பெற்று ஆயிரம் ரூபாயை வென்றதாக கருதிய நிலையில் நீண்ட நேரமாகியும் கவுரவன் கரையேறவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர் கரை ஏறாததால் பெருமாள் பயந்துபோய் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் உதவி மாவட்ட அலுவலர் பழனி தலைமையில் நிலைய பொறுப்பாளர் கலைமணி உள்ளிட்ட 12 வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய கவுரவனை ரப்பர் படகு மூலம் தேடினர். காலை 11 மணி முதல் தேடும் பணி நடந்த நிலையில் மாலை 5 மணி அளவில் அவர்கள் கவுரவனை பிணமாக மீட்டனர்.
பிரேத பரிசோதனை
இதுதொடர்பாக நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி (பொறுப்பு) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி அருகே நண்பர்கள் இருவரும் ஏரியில் நீந்தி குளித்தபோது ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நண்பருடன் ஒன்றாக மது அருந்திவிட்டு பந்தயம் கட்டி நீந்தியவர் ஏரியில் மூழ்கி சாவு
Related Tags :
Next Story