குடும்பத்துடன் காரில் தப்பிய குமரி வாலிபருக்கு கொரோனா


குடும்பத்துடன் காரில் தப்பிய குமரி வாலிபருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Dec 2021 12:19 AM IST (Updated: 5 Dec 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் குடும்பத்துடன் காரில் தப்பிய குமரி வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததால் சளி மாதிரி எடுத்து ஒமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 
மதுரை விமான நிலையத்தில் குடும்பத்துடன் காரில் தப்பிய குமரி வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததால் சளி மாதிரி எடுத்து ஒமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. எனவே உருமாறிய புதிய வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களும் உஷார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் ஒமைக்ரான் வைரஸ் பரவ அதிகளவு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 4 முக்கிய விமான நிலையங்கள் மூலமாக குமரி மாவட்டத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் விவரங்களை உடனுக்குடன் அனுப்பி வைக்கும்படி விமான நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சோதனை சாவடி
வௌிநாடுகளில் வசிக்கும் குமரி மாவட்ட மக்களில் பெரும்பாலானோர் திருவனந்தபுரம் விமான நிலையம் மூலமாகவே சொந்த ஊருக்கு வருவார்கள் என்பதால் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தவும், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களை 7 நாட்கள் வரை தனிமைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் கூறுகிறார்கள்.
மேலும் குமரி மாவட்டத்தில் கேரள எல்லையான களியக்காவிளை மற்றும் காக்கவிளை ஆகிய இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக வருபவர்களை பரிசோதனை செய்ய மருத்துவ குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் பரிசோதனை இன்றி அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மதுரை விமான நிலையத்தில்
அதே சமயம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு சோதனை சாவடியில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் நோய் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த வாலிபர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதாவது நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அந்த வாலிபர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவர் சிங்கப்பூரில் இருந்து குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தனர்.
விமான நிலையத்தில் வாலிபருக்கும், மனைவி மற்றும் குழந்தைக்கும் 2- கட்ட கொரோனா பாிசோதனை நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசோதனையில் 3 பேருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் 2-வது பரிசோதனை முடிவு வரும் வரை விமான நிலையத்தில் இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை வலியுறுத்தினர்.
தப்பிய வாலிபருக்கு கொரோனா
ஆனால் அவர் விமான நிலையத்தில் இருந்து குடும்பத்துடன் காரில் தப்பி நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். இதற்கிடையே 2-வது பரிசோதனை முடிவில் வாலிபரின் மனைவி மற்றும் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால் வாலிபருக்கு தொற்று இருப்பது உறுதியானது. உடனே விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகள் இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நலஅதிகாரி விஷ்ணு சந்திரன் தலைமையில் சுகாதார அதிகாரிகள் தப்பிய வாலிபரின் வீட்டுக்கு சென்று ஏற்கனவே தயாராக இருந்தனர். சிறிது நேரத்தில் வாலிபர் குடும்பத்துடன் காரில் வந்தார்.
உடனே அதிகாரிகள் நடந்தவற்றை கூறி வாலிபரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மேலும் கொரோனா பாதிப்பு இல்லாத மனைவி, குழந்தைக்கு மீண்டும் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு, வீட்டு தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அதே சமயத்தில் காரில் அவர்களுடன் வந்த டிரைவருக்கும் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
ஒமைக்ரான் தொற்று பரிசோதனை
இதேபோல் அமெரிக்காவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் கடந்த 22-ந் தேதி அமெரிக்காவில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளார். அதன்பிறகு 24-ந் தேதி அவர் சளி பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதே சமயம் அவருடைய குடும்பத்தாருக்கு தொற்று இல்லை.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிங்கப்பூரில் இருந்து வந்த வாலிபர் உள்பட 2 பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சளி மாதிரியானது ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பரிசோதனை முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை (திங்கட்கிழமை) வரும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,238 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story