ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்
x
தினத்தந்தி 5 Dec 2021 12:20 AM IST (Updated: 5 Dec 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளிலும் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்ட பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளிலும் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்ட பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பார்வையிட்டு ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் ஊராட்சி பாலாற்றில் இருந்து அரக்கோணம் ஒன்றியம் மின்னல், செம்பேடு, வேடல், காவேரிபாக்கம் ஒன்றியம் பாணாவரம் ஊராட்சி, சோளிங்கர் ஒன்றியம் ஆயல், குன்னத்தூர், நந்திமங்கலம், பழையபாளையம், போலிபாக்கம், சூரை மற்றும் தப்பூர் ஆகிய 11 கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட 89 குக்கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிட 5 நீர் உறிஞ்சி கிணறுகள் திருப்பாற்கடல் ஊராட்சி பாலாற்றில் அமைக்கப்பட்டு வருகிறது.
அங்கிருந்து ஒவ்வொரு ஊராட்சி வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 

இந்த திட்டத்தில் குழாய்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து திருப்பாற்கடல் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

75 சதவீத பணிகள் நிறைவு

பின்னர் கிராம சேவை மையத்தில் பொதுமக்களிடம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளில் சுமார் 2 லட்சத்து 4ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 75 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 54 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வரும் 2022 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். திருபாற்கடல் ஊராட்சியில் இப்பணிகள் 100சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் மகளிர் குழுக்களை சேர்ந்த 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு தண்ணீர் பரிசோதனை செய்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். 
ஆய்வின்போது ஊரக வளர்சசித் துறை கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் ரவீந்திரன், கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகர், செயற்பொறியாளர் ஆறுமுகம், நிலநீர் வல்லுனர் ராமன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவி, தாசில்தார் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story