ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரம் தடுப்பூசிகள் செலுத்தி இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் நுழைய அனுமதி
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தி இருந்ததால் மட்டுமே வாகனங்களில் வருபவர்கள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தி இருந்ததால் மட்டுமே வாகனங்களில் வருபவர்கள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஒமைக்ரான் தொற்று
கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். ஒமைக்ரான் பரவலை தடுக்க கர்நாடக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திலும் ஒமைக்ரான் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு வரும் முக்கிய தரைவழி பாதையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வருவாய்த்துறை, போலீசார், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. மேலும், பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடுப்பூசி
இதன் தொடர்ச்சியாக, நேற்றும் ஜூஜூவாடி பகுதியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் வாகனங்களை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் வாகனங்களில் பயணம் செய்பவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்களா? என்பதை விசாரித்து, அவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளையும் அதிகாரிகள் சரி பார்த்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் முதல் தவணை மட்டுமே செலுத்தி கொண்டவர்களுக்கு மாநில எல்லையில் தடுப்பூசி செலுத்தும் மையம் அமைத்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி தமிழகத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர், இதுவரை எந்தவித தடுப்பூசியும் செலுத்தாததால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அனுமதி
அந்த வாலிபர், கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தி கொள்வேன் என தொடர்ந்து கூறினார். இதனால், அவரை அதிகாரிகள் மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தடுப்பூசிகள் செலுத்தி இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story