லாரி மீது டேங்கர் லாரி மோதியது; டிரைவர், கிளீனர் உள்பட 4 பேர் பரிதாப சாவு


லாரி மீது டேங்கர் லாரி மோதியது; டிரைவர், கிளீனர் உள்பட 4 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 5 Dec 2021 2:52 AM IST (Updated: 5 Dec 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா அருகே சாலையோரம் நின்ற லாரி மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர், கிளீனர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிக்கமகளூரு: சித்ரதுர்கா அருகே சாலையோரம் நின்ற லாரி மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர், கிளீனர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த கோர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

வெங்காயம் ஏற்றி வந்த லாரி

கதக் மாவட்டம் ரோண் பகுதியில் இருந்து வெங்காய பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி நேற்று அதிகாலை சித்ரதுர்கா அருகே பெங்களூரு-சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தொட்டசித்தனஹள்ளி பகுதியில் வந்தபோது, திடீரென்று ஒரு டயர் பஞ்சர் ஆனது. இதனால் டிரைவர், லாரியை சாலையோரம் நிறுத்தினார். 

ஆனால் லாரியில் மாற்று டயர் இல்லாததால், பஞ்சரான டயரை சரி செய்ய முடிவு செய்தனர். சாலையோரம் லாரியை நிறுத்தி, டயருக்கு பஞ்சர் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது லாரியின் அருகே டிரைவர், கிளீனர் உள்பட 4 பேர் நின்று கொண்டிருந்தனர். 

4 பேர் சாவு

அந்த சமயத்தில், பெலகாவியில் இருந்து பெங்களூரு நோக்கி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டேங்கர் லாரி, சாலையோரம் பஞ்சர் பார்த்து கொண்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் வெங்காய பாரம் லாரியின் பின்புறமும், டேங்கர் லாரியின் முன்புறமும் பயங்கர சேதம் ஏற்பட்டது. வெங்காய பாரம் ஏற்றி வந்த லாரியில் இருந்த வெங்காயம் அனைத்தும் சாலையில் கொட்டி சிதறின.

டேங்கர் லாரி மோதிய வேகத்தில், வெங்காய லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்த 4 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி அறிந்ததும் சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் ரோண் பகுதியை சேர்ந்த சரணப்பா (வயது 35), குஷ்டகியை சேர்ந்த சஞ்சய் (24), குஷ்டகியை சேர்ந்த மஞ்சுநாத் (26), ராய்ச்சூரை சேர்ந்த ஹுலியப்பா (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களில் சரணப்பா, விபத்துக்குள்ளான டிரைவராகவும், சஞ்சய் கிளீனராகவும் இருந்தனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

இந்த விபத்து காரணமாக பெங்களூரு-சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

சோகம்

இதுகுறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோர விபத்து அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story