இடி, மின்னலுடன் பலத்த மழை: சேலத்தில் டிரான்ஸ்பார்மர், 3 மின் கம்பங்கள் சரிந்தன 200 வீடுகளில் மின்தடை
சேலத்தில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையினால் டிரான்ஸ்பார்மர் மற்றும் 3 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 200 வீடுகளில் மின்தடை ஏற்பட்டது.
சேலம்
பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் ஏரிகள், குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் சேலம் எருமாபாளையம் ஏரி கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.
இதை பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையினால் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதன் காரணமாக நேற்று காலை நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலர் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் பல்வேறு விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் வீரர்களும், வீராங்கனைகளும் தவித்தனர். சேலம் சின்னகொல்லப்பட்டி உள்பட மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் அதிகளவு தேங்கி நின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர்.
டிரான்ஸ்பார்மர் சரிந்தது
சேலம் களரம்பட்டி பாரதியார் தெரு பகுதியில் உள்ள ஓடையையொட்டி டிரான்ஸ்பார்மர் ஒன்று இருந்தது. இந்த நிலையில் மழையினால் நள்ளிரவில் அந்த டிரான்ஸ்பார்மர் திடீரென சரிந்து விழுந்தது. இதையடுத்து அதன் அருகில் உள்ள 3 மின்கம்பங்களும் அடுத்தடுத்து சரிந்து விழுந்தன. மின்சார வயர்கள் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மீது விழுந்து கிடந்தன.
டிரான்ஸ்பார்மர் விழுந்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கின.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை அங்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
மாணவர்கள் சிரமம்
சேலம் அருகே உள்ள புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் ரெயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல சுரங்கப்பாதை உள்ளது. மழையினால் இந்த சுரங்க பாதையில் தண்ணீர் அதிகளவு தேங்கி நின்றது.
இதனால் சிவதாபுரம், பெரியார் நகர், சின்னபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அந்த வழியை கடக்கும் போது மிகவும் சிரமம் அடைந்ததை பார்க்க முடிந்தது. இந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை அளவு
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக எடப்பாடியில் 95 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழைஅளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
மேட்டூர்-69, சங்ககிரி-58.2, சேலம்-44.7, காடையாம்பட்டி-11, ஓமலூர்-10, ஏற்காடு-3.
Related Tags :
Next Story