தேவூர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை: சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கால் 4 தரைப்பாலங்கள் மூழ்கின போக்குவரத்து துண்டிப்பால் தீவுகளாக மாறிய 20 கிராமங்கள்
எடப்பாடி, தேவூர் பகுதிகளில் விடிய, விடிய பெய்த பலத்த மழையால், சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் 20 கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாக மாறின.
தேவூர்,
பலத்த மழை
சேலம் மாவட்டம், எடப்பாடி, தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது.
இந்த பலத்த மழையால் தேவூர் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. ஒரு சில கரையோர கிராமங்களில் கோழிகள், நாய்கள் என்று வளர்ப்பு பிராணிகளும் திடீர் வெள்ளப்பெருக்கால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.
மேலும் தேவூர் அருகே அரசிராமணி, குஞ்சாம்பாளையம், ஆத்துக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தன. தண்ணீரில் நெல்பயிர்கள் மூழ்கி வயல்வெளிகள் குளம் போன்று மாறின.
தரைப்பாலங்கள் மூழ்கின
குள்ளம்பட்டி ஆத்துக்காடு, செட்டிப்பட்டி ஓங்காளியம்மன் கோவில், தைலாங்காடு, வயக்காடு ஆகிய 4 இடங்களில் சரபங்கா நதியில் அமைக்கப்பட்ட தரைப்பாலங்கள் வெள்ளப்பெருக்கால் மூழ்கின. தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக மாறியதால், இந்த பாலத்தின் வழியாக சென்று வரும் மலங்காடு, மலைமாரியம்மன் கோவில், வெள்ளூற்று கோவில், ஓலப்பாளையம், கல்லம்பாளையம், ஆரையான்காடு, தைலாங்காடு, எல்லப்பாளையம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த கிராமங்கள் தனித்தீவுகளாக மாறி உள்ளன. வெள்ள நீர் வடிந்த பிறகு தான் அதிகாரிகள் குழுவினர் அந்த கிராமங்களுக்கு சென்று மழைவெள்ள சேத விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
அதே நேரத்தில் தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் தேவூர் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே சாலைகளில் தடுப்பு அமைத்து பொதுமக்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சாலையில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவிலை சூழ்ந்த வெள்ளம்
இதனிடையே நேற்று அமாவாசை என்பதால் செட்டிப்பட்டி சுடலை காளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர். அங்கு துர்க்கை அம்மன் உள்பட பல்வேறு சாமி சிலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பக்தர்கள் மழைநீர் தேங்காத பகுதியில் நின்று சாமியை வழிபட்டு விட்டு திரும்பி சென்றனர்.
அதேபோல் செட்டிப்பட்டி பாலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் திடீரென மழைநீர் புகுந்தது. இதனால் அங்குள்ள விளையாட்டு மைதானம் தண்ணீர் நிரம்பி குளம்போல் மாறியது. மேலும் பள்ளி வகுப்பறைக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது.
பள்ளிக்கு விடுமுறை
இதையடுத்து தேவூர் வருவாய்த்துறையினர் மற்றும் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மதியத்துக்கு மேல் பள்ளிக்கு விடுமுறை விட்டனர். மேலும் மாணவ, மாணவிகளை அவர்களின் பெற்றோரை வரவழைத்து பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தேவூர் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தடுப்பணை ததும்பி தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் இந்த தடுப்பணை வழியாக வழக்கமாக சென்று வரும், மயிலம்பட்டி, மேட்டுக்கடை, பெரமாச்சிபாளையம், சென்றாயனூர், சோழக்கவுண்டனூர் உள்பட பல்வேறு கிராம மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மாற்றுப்பாதையில் வௌியூர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் சங்ககிரியில் பெய்த கனமழையால் பால்வாய் தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
Related Tags :
Next Story